கோவைக்காய் சாகுபடி

கோவக்காய்

எப்படி பயிரிடுவது...?

இரகங்கள்

கருங்கோவை, மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, படப்பை, நாமக்கோவை உள்ளிட்ட வகைகள் உள்ளன.

பருவம்

சித்திரை மாதத்தைத் தவிர மற்ற எல்லா மாதங்களிலும் கோவைக்காய் கொடித் தண்டுகளை நடவு செய்யலாம். ஆனால், ஆடிப்பட்டத்தில் நடவு செய்தால் முளைப்பு, செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
ஒரு முறை நடவு செய்யும் கோவைக்காய் செடிகளை, மூன்று ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம்.

மண்

வடிகால் வசதியுடன் கூடிய செம்மண், மணல்சாரி ஆகிய மண்வகைகள் கோவைக்காய்க்கு ஏற்றவை.

நிலம் தயாரித்தல்

தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 2 டன் எருவைக் கொட்டிக் கலைத்துவிட்டு, மூன்று சால் உழவு செய்து, நான்கு நாட்கள் ஆற விட வேண்டும். பிறகு முளைத்து வரும் களைகள் நீக்கும் அளவிற்கு மீண்டும் உழவு செய்து நிலத்தைச் சமப்படுத்திக்கொள்ள வேண்டும்.

விதை

பெண் செடிகளிலிருந்து கிடைக்கும் தண்டுக்குச்சிகள் தான் நடவுக்கு பயன்படுகின்றன. விதைக்கான கொடித் தண்டுகளைத் தேர்வு செய்யும் பொழுது இரண்டு முதல் இரண்டரை வயதுள்ளவையாக இருக்க வேண்டும்.

விதைநேர்த்தி

தரையில் இருந்து அரை அடி உயரத்துக்கு மேல் இருக்கும் கொடிகளாகப் பார்த்து, அரை அடி துண்டுகளாக வெட்டி, அவற்றை சாணிப்பாலில் நனைத்து நடவு செய்ய வேண்டும் (ஒரு ஏக்கருக்கு 10 கிலோ சாணியை, 30 லிட்டர் தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும்).

விதைத்தல்

6 அடி இடைவெளியில் ஓர் அடி அகலத்தில் கிழக்கு-மேற்காக வாய்க்கால் அமைக்க வேண்டும். இந்த வாய்க்காலில் 6 அடி இடைவெளியில் (6X6 அடி) ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுத்து ஒவ்வொரு குழியிலும், இரண்டு கிலோ எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூடி, மூன்று அல்லது நான்கு கோவைக்காய் கொடித் தண்டுகளை நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நடவு செய்த பிறகு குழிகள் மீது வைக்கோல் கொண்டு மூடாக்குப் போட்டு உயிர்த் தண்ணீர் கொடுக்க வேண்டும். மண்ணில் ஈரம் இருப்பதற்கு ஏற்ப 5 நாட்கள் வரை ஒருநாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் கொடுக்க வேண்டும். அதன் பிறகு பாசன இடைவெளியைக் கூட்டிக் கொள்ளலாம். சாதாரண முறையில் பாசனம் செய்வதைவிட, சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பது சிறப்பானது. சாதாரணப் பாசனமாக இருந்தால் 4 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறையும், சொட்டு நீர்ப்பாசனமாக இருந்தால், 2 நாட்களுக்கு ஒருமுறையும் பாசனம் செய்தால் போதுமானது.

Comments

Popular posts from this blog

Soil Science

Agricultural Statistics